மிகவும் சூடான தேநீர் மற்றும் காபி புற்றுநோய் அபாயத்தை அதிகரிக்கலாம்

இங்கிலாந்தில் நடத்தப்பட்ட ஒரு முக்கிய ஆய்வில், மிகச் சூடான தேநீர் மற்றும் காபி பருகுவது உணவுக்குழாய் புற்றுநோய் அபாயத்தை மும்மடங்கு அதிகரிக்கக்கூடும் என கண்டறியப்பட்டுள்ளது.

Gagana

60 விநாடிகளில்

  • இங்கிலாந்தில் சுமார் பத்து இலட்சம் பேரை இணைத்து இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
  • 65 டிகிரி செல்சியஸுக்கு மேல் சூடான பானங்களை பருகுவது புற்றுநோய் அபாயத்தை மும்மடங்காக்கும்.
  • நாளை ஒன்றுக்கு ஆறுக்கும் மேற்பட்ட சூடான பானங்கள் அருந்துவது அபாயத்தை 71 சதவீதம் உயர்த்தும்.

ஐக்கிய ராஜ்ஜியத்தில் சுமார் பத்து இலட்சம் மக்களை இணைத்து நடத்தப்பட்ட ஒரு விரிவான ஆய்வின் மூலம், மிகவும் சூடான தேநீர், காபி மற்றும் பிற சூடான பானங்களை அருந்துவது உணவுக்குழாய் புற்றுநோய் அபாயத்தை மும்மடங்கு உயர்த்தக்கூடும் என்பது தெரிய வந்துள்ளது. சர்வதேச புற்றுநோய் இதழில் வெளியிடப்பட்டுள்ள இந்த ஆய்வின்படி, சூடான பானங்களை விரும்புவோரை விட மிகச் சூடான பானங்களை விரும்புவோருக்கு உணவுக்குழாய் செதிள் செல் புற்றுநோய் வருவதற்கான ஆபத்து இரண்டு மடங்கிற்கும் அதிகமாக உள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

உணவுக்குழாய் என்பது வாயில் இருந்து இரைப்பைக்கு உணவையும் பானங்களையும் கொண்டு செல்லும் தசைக் குழாயாகும். இந்த ஆய்வில் பானங்களின் வெப்பநிலைக்கு கூடுதலாக உட்கொள்ளும் அளவும் முக்கியமானது என கண்டறியப்பட்டுள்ளது. அதன்படி, ஒரு நாளைக்கு ஆறு அல்லது அதற்கு மேற்பட்ட சூடான பானங்களை பருகுவது, ஆறிற்கும் குறைவாக அருந்துபவர்களுடன் ஒப்பிடும்போது 71 சதவீத அதிக அபாயத்தைக் கொண்டுள்ளது.

சர்வதேச புற்றுநோய் ஆராய்ச்சி நிறுவனம் 65 டிகிரி செல்சியஸுக்கு மேல் நுகரப்படும் 'மிகவும் சூடான' பானங்களை மனிதர்களுக்கு புற்றுநோயை உண்டாக்கும் காரணியாக வகைப்படுத்தியுள்ளது. இந்த ஆய்வில் சம்பந்தப்படாத குவாட்ரம் நிறுவனத்தின் கௌரவப் பணியாளர் இயன் ஜான்சன், 65 டிகிரி செல்சியஸுக்குக் குறைவான வெப்பநிலையில் பானங்களை பருகுவது நல்லது என்று தெரிவித்தார், இருப்பினும் வழக்கமான பழக்கங்களை மாற்றுவது சவாலானது என்றும் அவர் குறிப்பிட்டது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையில், உணவுக்குழாய் புற்றுநோய் வருவதற்கான ஒட்டுமொத்த சாத்தியக்கூறு ஒப்பீட்டளவில் குறைவாகவே உள்ளது என்றும், சூடான பானங்கள் நேரடியாக புற்றுநோயை ஏற்படுத்துவதை விட இது ஒரு தொடர்பைக் காட்டுகிறது என்றும் ஆராய்ச்சியாளர்கள் வலியுறுத்தினர்.

மூலங்கள்

கீழ்க்காணும் ஊடகங்களின் அறிக்கைகளின் அடிப்படையில் நியூஸ்லங்கா செய்திப் பிரிவால் மீண்டும் எழுதப்பட்டது.

  • Gagana
சூடான தேநீர் மற்றும் காபி புற்றுநோய் அபாயத்தை அதிகரிக்கும் | நியூஸ்லங்கா