புத்தளம் நகரபிதாவுடன் ஏற்பட்ட மோதலில் காயமடைந்த இளைஞர் வைத்தியசாலையில் கைது
புத்தளம் நகரபிதாவினால் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் பழ வியாபாரி ஒருவர் சிகிச்சைப் பெற்றுவரும் நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
60 விநாடிகளில்
- சம்பவம் நேற்று முன்தினம் (27) மாலையில் புத்தளம் தில்அடியா பகுதியில் இடம்பெற்றது.
- உதார புஷ்பிக என்ற 29 வயதுடைய பழ வியாபாரியே காயமடைந்துள்ளார்.
- நகரபிதா இம்ஷாத் அஹமட் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் வைத்தியசாலையில் வைத்து இளைஞர் கைது செய்யப்பட்டார்.
இந்தச் செய்தி வளர்ந்த விதம்
நீங்கள் வாசிப்பது புத்தளம் நகரபிதாவுடன் ஏற்பட்ட மோதலில் காயமடைந்த இளைஞர் வைத்தியசாலையில் கைது
புத்தளம் பிரதேசத்தில் நகரபிதாவுடன் ஏற்பட்ட முரண்பாட்டின் போது காயமடைந்த இளைஞர் ஒருவர் பொலிஸ் பாதுகாப்பின் கீழ் புத்தளம் அடிப்படை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். புத்தளம் தில்அடிய பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய உதார புஷ்பிக என்பவரே இவ்வாறு சிகிச்சை பெற்று வருகிறார்.
கடந்த 27 ஆம் திகதி மாலையில் புத்தளம் கொழும்பு வீதியில் தில்அடியா பகுதியில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த நபர் வீதியோரத்தில் பழ வியாபாரம் செய்து வந்த நிலையில், அந்த இடத்திலிருந்து அகன்று செல்லுமாறு மாநகரசபை அதிகாரிகளால் இதற்கு முன்னர் அறிவுறுத்தப்பட்டிருந்தது.
இதனைத் தொடர்ந்து தனது தற்காலிகக்டையை அகற்றிய அந்த இளைஞர், வீதியோரத்தில் மேசையொன்றை வைத்து வியாபாரம் செய்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் மாலையில் அங்கு வந்த புத்தளம் நகரபிதா அந்த மேசையையும் உடனடியாக அகற்றுமாறு பணித்துள்ளார்.
அருகில் உள்ள மற்றைய வியாபாரிகளை அகற்றாதது ஏன் என அந்த இளைஞர் கேள்வி எழுப்பிய போது, நகரபிதா தனது கப் வாகனத்திற்குள் இருந்தவாறு தன்னைத் தாக்கியதாக அவர் குறிப்பிட்டுள்ளார். தாக்குதலுக்குள்ளான இளைஞர் நகரபிதா வந்த வாகனத்தின் மீது கல்வீச்சுத் தாக்குதல் நடத்தியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தனது உத்தியோகபூர்வ வாகனத்தின் மீது நபர் ஒருவர் தாக்குதல் நடத்தியதாக புத்தளம் நகரபிதா இம்ஷாத் அஹமட் புத்தளம் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார். குறித்த முறைப்பாட்டின் அடிப்படையில் செயற்பட்ட பொலிசார், வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் இளைஞரைக் கைது செய்துள்ளனர்.
மூலங்கள்
கீழ்க்காணும் ஊடகங்களின் அறிக்கைகளின் அடிப்படையில் நியூஸ்லங்கா செய்திப் பிரிவால் மீண்டும் எழுதப்பட்டது.
- Dasatha Lanka News
- Lanka C News



